காலை நேர பரபரப்பு. அடுப்பில் சமையல் ஒரு பக்கம். 2 ம் வகுப்பு படிக்கும் பையனை உட்கார வைத்து பாடம் நடத்த பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தேன்.
தமிழ் பாடம்.
நான் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லச் சொல்ல அவன் எழுதிக் கொண்டிருந்தான்.
‘பாட்டு’
எங்கே எழுது என்று சொல்ல அவன் பாட் என்று எழுதி விட்டு தீவிரமாக யோசிக்கத் துவங்கினான்.
எனக்கு கோவம். இது கூடத் தெரியலையா? என்று அவன் கையேடை ப் பிடுங்கி ‘டு’ tu எழுதி, இது தான் ‘டு’ tu என்றேன்.
இது ‘டு’ ‘du’. என்றான் கண் எல்லாம் நிறைந்து குளமாகி
அப்போது தான் புரிந்தது தமிழ் எழுத்து அதன் இடத்திற்குத் தகுந்த படி ஒலி மாற்றம் செய்து கொள்வதை அவன் பள்ளியில் கற்றுக் கொண்டிருக்கவில்லை.
எனக்கும் அவனுக்குமான இந்த தமிழ் படித்தல் என்பது எப்போதுமே ஒரு போராட்டத்திலேயே முடியும்.
தமிழ் அவனுக்கு எப்போதுமே அவனது பாடப் பட்டியலில் கடைசி இடமே வகிக்கும்.
இதனால் அவனுக்கு ஆங்கில அறிவு அதிகம் என்று எண்ணி விட வேண்டாம்.
தமிழில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டால் தரும் அதிர்ச்சி (உதாரணமாக ‘தயாராகி வருகிறேன்’ என்பதை ஒரு பெண் தாயாராகி வருகிறேன் என்று எழுதுவது போன்று )
அளவு அதிர்ச்சி ஆங்கிலம் தருவதில்லை என்கின்ற அளவிலேயே வித்தியாசம். மற்றபடி எல்லா
பாடத்தையும் ஆங்கிலத்தில் படிப்பதால் கொஞ்சம் அறிமுகம் அதிகம் அவ்வளவே.
அவனுக்கு தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தி விடும் எனது முயற்சி எப்போதுமே தோல்வியிலேயே முடியும்.
நானும் என் முயற்சியை கை விடுவதில்லை.
3 வருடங்களுக்கு முன் ஒரு முறை தமிழில் குழந்தைகளுக்கான பிரபல மாத இதழ் ( may be bi-monthly) ஒன்றை அதன் விலையை வியந்து கொண்டே வாங்கி அவனுக்குக் கொடுத்து படிக்கச் சொன்னேன்.
அவன் அலட்சியமாக பக்கங்களைப் புரட்டி விட்டு கேலிச் சித்திரம் அல்லது கருத்துச் சித்திரம் (comic/cartoon) பக்கத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
சில நிமிடங்கள் கழித்துச் அம்மா என்று ஒரு அலறல். அவன் தான். அப்பப்போ இப்படி கத்தி பயமுறுத்துவான்.
இது தமிழா? என்று புத்தகத்தை என் முகத்தின் மேல் வைத்து திணித்தான்.
படித்துப் பார்த்தால் ,
இடம் : காடு.
காட்சி:
விலங்குகள் நவீன உடை அணிந்து, கையில் மேற்கத்திய இசைக் கருவிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் காட்சி.
ஏய் பீட்டர் இன்னா மே ட் டரு?
ஈவிநிங்கு பார்ட்டிக்கு போலாமா?
தமிழ் புத்தகம் என்று நான் அவனுக்கு கொடுத்திருப்பதாலும் அவன் தமிழ் அறிவை நான் அடிக்கடி விமர்சிப்பதாலும் அவனுக்கு சில நிமிடங்கள் ஆகியிருக்கிறது அது என்ன மொழி என்று புரிந்து கொள்ள.
திரும்பவும் கத்தினான். இது தமிழா?
என்னிடம் பதில் இல்லை.
சரி என்று நானும் வேறு பக்கங்களை புரட்டி ஏதாவது ஒரு பக்கத்தை வாசிக்க வைத்து விடுதல் என்ற முடிவோடு தேடினேன்.
ஆங்கிலப் படுத்திய தமிழ் என்று சொல்லுவதா அல்லது ஆங்கிலத்தை தமிழில் எழுதிய என்று சொல்வதா அல்லது பேச்சுத் தமிழ் என்று சொல்வதா வேறு எப்படிச் சொல்லுவது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் புத்தகம் என்ற வரையறையில் இல்லை என்று மட்டும் சொல்ல முடியும்.
எனக்கு இப்போது நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
மொரார்ஜி தேசாய் என்பதை நாங்கள் ஒவ்வொரு வரும் வித விதமாக எழுதியது நினைவுக்கு வருகிறது.
தோசய்
தேசய்
தொசய்
தெசய்
இப்படியான வித விதமான பதில்களைப் பார்த்து விட்டு மிரண்டு போன ஆசிரியை அனைவரையும் முட்டி போடச் சொன்னது மறக்க முடியாத ஒரு பள்ளிப் பருவ அனுபவம்.
அவனது முந்தைய வகுப்பு தமிழ் புத்தகங்களை எடுத்து படிக்க வைக்கலாம். முந்தைய வருடத்தையது என்பதால் சிறிது எளிதாக இருக்கும் என்று புரட்டிப் பார்த்தால் காந்தி, காமரசர் என்று வரலாறுகள் அதிகமாக இருந்தது.
மொழிப் பாடங்களில் எதற்கு வரலாறு பாடங்கள் சொல்லித் தரப் படுகின்றன் என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை.
சரி இது ஆர்வம் ஊட்டும் முயற்சிக்கு ஒத்து வராது என்று வேறு முயற்சியில் இறங்கினேன்.
இப்படியாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறதே அன்றி எனது முயற்சியை கை விட்டு விடவில்லை என்பது தவிர முயற்சியில் பெரிதாக வெற்றி ஒன்றும் பெற்று விடவில்லை.
இப்போது விடப் பட்ட பொங்கல் விடுமுறையில் ஒரு நாள்
“போய் படி” என்று தொ. கா முன் இருந்து பையனை துரத்தி விட்டு நான் அமர்ந்தேன்.
நமது விஜய் இல் ஒரு தமிழ் நிகழ்ச்சி.
கோட்டு போட்ட கோபிநாத் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
தமிழ் அறிவு பற்றிய நிகழ்ச்சி என்றதும் பையனை வேகமாகச் சென்று அழைத்து வந்தேன்.
திருக்குறள் அறிவை சோதிக்கும் சுற்று.
விஜய்அதன் பிற நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் உறுப்பினர்களை வைத்தே மீதி பாதி நிகழ்ச்சிகளை நடத்தி விடும் என்பது எல்லோருக்கும் புரிந்த விஷயம்.
இந்த நிகழ்ச்சி அதில் ஒன்று.
எல்லோருக்கும் பரவலாகத் தெரிந்த அதே சில குறள்கள் மூன்றாம் வகுப்பு கேள்வித் தாள் போல் கேட்கப்பட்டது.
அடுத்தது தமிழ் படுத்துதல் சுற்று.
Pressure cooker என்பதன் தமிழ் என்ன?
அழுத்த என்பதற்கு மேல் எல்லோரும் தயங்கிக் கொண்டே பாத்திரம், என்று வேறு வேறு பதில்கள். எனக்கும் அழுத்த என்பதற்க்கு மேல் தெரிய வில்லை என்பதால் ஆர்வம் அதிகம் ஆனது.
அழுத்த கலன் என்று நமது யோசிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்தார் நடுவர் அல்லது சிறப்பு விருந்தினர் பெரியார் தாசன் அவர்கள்.
அடுத்தது shampoo
இதற்கு கழுவான் என்று கூறினார் என்று நினைக்கிறேன்.
என் பையன் பக்கம் நான் திரும்பவே இல்லை. திரும்பாமலேயே அவன் என்னை முறைப்பதை உணர முடிந்தது.
இந்த வினோத தமிழ் ‘படுத்துதலைப்’ பற்றி நான் யோசிக்குமுன் இன்னொன்றும் கூறினார் பெரியார் தாசன் அவர்கள்.
என்ன என்றால்,
எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில மொழியையே 80% மக்கள் பேசுகிறார்கள். அது போலவே தமிழ் நாட்டிலும்.
உங்கள் நிகழ்ச்சிகள் தமிழில் இல்லை என்றாள் நீங்கள் 20% மக்களையே சென்று அடைகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றார்.
நல்ல அறிவுரை.
ஆனால் கிராமங்களில் போய் நான் அழுத்த கலன், கழுவான் என்று பேசினால் அவர்கள் என்னை வேறு கிரகத்தில் இருந்து வந்தது போல் பார்க்க மாட்டார்கள் என்கிற உத்தரவாதம் இருக்கிறதா?
consumer products ஐ தமிழ் படுத்தல் என்பது ‘படுத்தல்‘ ஆகவே இருப்பதை உணர்வார்களா?
உதாரணமாக soap என்பது சவர்க்காரம் என்று சொல்வது கடினமாகவே இருக்கிறது.
அதெல்லாம் இருக்கட்டும்.
சில நாட்கள் முன் அதே விஜய் இல் கோட்டு போடும் (மேல் அங்கி) கோபிநாத்
அன்று வேட்டியில் இருந்தார்.
பேச்சாளர்கள் பற்றிய ஒரு நீயா நானா? நிகழ்ச்சி.
ஒரு பெண், பேச்சாளர் போலும், தன் கருத்துக்களைக் கூறும் போது ஐயா . என்று சில தடவைகள் அழைத்து விட ஏன் என்னை ஐயா என்று அழைகிறீர்கள்? ஒரு வேட்டி கட்டக் கூடாதா? என்று பட்டென்று கடித்து விட்டார் மனிதர்.
பழக்க தோஷத்தில் அழைத்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு Sir என்று அழைக்க நிகழ்ச்சி தொடர்ந்தது.
Sir என்பதன் தமிழ் படுத்தல் தான் ஐயா என்று யாராவது கோபிநாத் அவர்களுக்கு சொல்லுங்களேன்.
பி.கு:
என் பையனுக்கு தமிழ் ஆர்வம் ஊட்டும் முயற்சியை தற்காலிகமாக தள்ளி வைத்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

உங்கள் பையனின் ஆர்வம் எந்த பாடத்தில் என்று பாருங்கள். உதாரணத்துக்கு அறிவியல் என்று வைத்துக்கொள்வோம். தமிழில் அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கி கொடுங்கள். எனக்கு வானவியலில் அதீத ஆர்வம். எனது இடுகைகளை [Blog] பார்த்தால் உங்களுக்கு புரியும். அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை நான் படிக்கிறேன் மற்றும் எனது குழந்தைக்கும் அதையே படிக்க கொடுக்கிறேன். நாம் கட்டாயபடுத்தி எதையும் புரியவைக்கமுடியாது. நம்மை சூழ்ந்துள்ள சமுதாயம் அப்படித்தான். பணம் எங்கிருந்து வருகிறதோ அதற்கு ஒரு வணக்கம் வைத்து வாழவைக்கும். மற்றவைகளை மறந்துவிடும்.
இது ஒரு நல்ல கட்டுரை. ஆனால் சிந்திப்பதோடு நிறுத்தாதீர்கள். அதை செயல்படுத்துவதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள்.
நன்றி,
சக்திக்குமரன் விஜயராகவன்.
http://itsmytamil.blogspot.com/
சத்யா, angel உங்கள் வருகைக்கு நன்றி.
இப்போ மாணவர்களுக்கு தமிழ் வார்த்தைக்கும் ஆங்கில வார்த்தைக்கும் வித்தியாசம் தெருயாத அளவிற்கு தமிழில் எழுதப் படும் ஆங்கிலக் கலப்பு நமது தமிழ் பத்திரிக்கைகளில் மிக அதிகமாக இருக்கிறது. தொலைகாட்சியும் இதற்குப் பெரும் அளவில் உதவி செய்கிறது. தமிழ் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வருகிறது.
take him to dinamalar website or any other tamil newspaper website on online
if possible have a visit at my blog
http://mythinkingforsharing.blogspot.com/
Sindhikka vaikum article. Tamil oda ethirkalam eppadi irukka pogiradhu endra achathai undu pannugirahu. Nice article